தேசிய விருது பெற்ற இயக்குனர் மணிகண்டனின் அடுத்த படைப்பு “கடைசி விவசாயி”

“கலப்பையின் உழைப்பே அகப்பையில் சோறு…” என்ற கருத்தை  நாம் யாரும் என்றுமே மறந்து விட கூடாது. என்ன தான் தமிழ் ரசிகர்கள் சினிமாவில்  காதல், அதிரடி, நகைச்சுவை மற்றும் செண்டிமெண்ட் ஆகிய குணங்களை விரும்பினாலும், சமூதாய அக்கறை கொண்ட திரைப்படங்களுக்கு மட்டும் அவர்களிடம் என்றுமே நல்ல வரவேற்பு உண்டு. இயக்குனர் மணிகண்டன் இயக்கிய ‘காக்கா முட்டை’ திரைப்படமே அதற்கு சிறந்த உதாரணம். காக்க முட்டை படத்தை  தொடர்ந்து ‘குற்றமே தண்டனை’ மற்றும் ‘ஆண்டவன் கட்டளை’ ஆகிய படங்களை இயக்கி இருக்கும் இயக்குனர் மணிகண்டன், தற்போது தன்னுடைய அடுத்த படைப்பான  ‘கடைசி விவசாயி’ படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டு இறுதியில் ஆரம்பிக்க இருக்கிறார். ‘ஈரோஸ் இன்டர்நேஷனல்’ தயாரிக்க இருக்கும் இந்த ‘கடைசி விவசாயி’ படத்தில்  70 வயது நிரம்பிய முதியவர் தான் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த வேடத்திற்கு கனக்கட்சிதமாக பொருந்தும் நபரை தற்போது  படக்குழுவினர் தேடி வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ் ரசிகர்களிடையே நன்கு பழக்கப்பட்ட முகங்கள் இந்த ‘கடைசி விவசாயி’ படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிப்பது மேலும்  சிறப்பு.

” ஒருபுறம்  கோலா தொழிற்சாலைகளும், கார்ப்பரேட்  நிறுவனங்களும் நம் நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து கொண்டு  இருக்க, மறுபுறம் விவசாயி  தற்கொலை செய்து கொள்வது நம் நாட்டில் அதிகரித்து கொண்டே போகிறது. நம்முடைய அன்றாட வாழக்கைக்கு தேவையான உணவை வழங்கும் விவசாயிகள் தற்போது வாழ்க்கையிலும் சரி, விவசாயத்திலும் சரி, சரிந்து கொண்டே போகிறார்கள். ‘கடைசி விவசாயி படத்தின் கதையை இயக்குனர் மணிகண்டன் எங்களிடம்  சொன்ன அடுத்த கணமே, இந்த படத்தை தயாரிக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்து விட்டோம். சமூதாய அக்கறையோடு உருவாக இருக்கும் இந்த  ‘கடைசி விவசாயி’ படத்தில் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற காமெடி, காதல் என பல சிறப்பம்சங்களையும் நாங்கள் சேர்க்க இருக்கிறோம். எனவே  ‘கடைசி விவசாயி’ படமானது அனைத்து தரப்பு ரசிகர்களாலும் விரும்பக் கூடியதாக இருக்கும். சட்டத்தின் சிக்கலான விதி முறைகளால் குழம்பி போன ஒரு சராசரி விவசாயி,  எப்படி அந்த சிக்கல்களை புரிந்து கொண்டு அதில் இருந்து வெளியே வருகிறார் என்பது தான் எங்களின் ‘கடைசி விவசாயி’ படத்தின் கதை கரு. நம்முடைய பசியை போக்க தங்களின் வியர்வையை சிந்தும் விவசாயிகளுக்கு இந்த  ‘கடைசி விவசாயி’ திரைப்படம் ஒரு சமர்ப்பணம்…”

“லிங்கா மற்றும் கோச்சடையான் திரைப்படங்களுக்கு பிறகு எங்களின் வரிசையில் இருக்கும் படங்கள் யாவும் முற்றிலும் வலுவான கதை களத்தை கொண்டு இருக்கிறது. தங்களின் தனித்துவமான கதையம்சத்தினால் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்ற அனுபவம் வாய்ந்த  இயக்குனர்கள் வெங்கட் பிரபு, பிரபு சாலமன், மணிகண்டன் மற்றும் அறிமுக இயக்குனர்கள் பரத் கிருஷ்ணமாச்சாரி, சுரேஷ் சங்கையா ஆகியோருடன் நாங்கள் பணிபுரிந்து வருவது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது…என்கிறார் ‘ஈரோஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனத்தின்  சாகர் சத்வானி.

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *